அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து வெளிப்பட்ட காவிரி இத்தலத்திற்கு வந்தபோது ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் புகுந்தது. இதைக் கண்ட மக்கள் அருகில் உள்ள கொட்டையூரில் தவம் செய்துக் கொண்டிருந்த ஹேரண்ட முனிவரிடம் சென்று இச்செய்தியைச் தெரிவித்தனர். முனிவரும் மக்களுக்கு தேவைப்படும் காவிரித்தாய் பூமியின் மேல் ஓடுவதற்கு அப்பள்ளத்தில் புகுந்தார். அதனால் காவிரி இப்பகுதியில் வலமாக மேலே எழுந்து பாய்ந்தோடியது. காவிரி வலமாக வெளிப்பட்ட இடமாதலால் இத்தலம் 'வலஞ்சுழி' என்று பெயர் பெற்றது.
மூலவர் 'கபர்தீஸ்வரர்', 'கற்பகநாதர்', 'சடைமுடிநாதர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'பிரஹந் நாயகி', 'பெரிய நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள். சுவாமியும், அம்பிகையும் அருகருகே தனித்தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர். இது கல்யாணக் கோலம் ஆகும். எனவே திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இங்கு இரண்டு மூலவர்களுக்கும் தனித்தனி இராஜகோபுரங்களும் உள்ளன. அம்பிகை சன்னதிக்கு அருகில் அஷ்டபுஜ காளி தரிசனம் தருகின்றாள். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக பக்தர்களால் வணங்கப்படுகின்றாள். அதேபோல் பைரவர் சன்னதியும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காவிரியை மேலெழச் செய்த ஹேரண்ட முனிவரின் திருவுருவம் பிரகாரத்தில் உள்ளது.
இக்கோயிலில் மற்றொரு சிறப்பம்சம் சுவேத விநாயகர். அகலிகையால் சாபம் பெற்ற இந்திரன், அதை நிவர்த்தி செய்யும்பொருட்டு, பாற்கடல் கடைந்தபோது எழுந்த நுரையைக் கொண்டு செய்யப்பட்ட விநாயகப் பெருமானை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலத்திற்கு வந்தபோது விநாயகப் பெருமான் இங்கேயே தங்கி விட்டார். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் சதுர்த்தி (விநாயக சதுர்த்தி) அன்று தம்மை வந்து வழிபடுமாறு இந்திரனுக்கு விநாயகர் அருளினார். கொடிமரத்திற்கு முன்னர் இவர் சன்னதி உள்ளது. சிறந்த சிற்பக்கலையுடன் இது விளங்குகின்றது. கருங்கற் பலகணி (ஜன்னல்) மிகவும் அதிசயம்.
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை மையமாகக் கொண்டு பரிவார சன்னதிகளாக இத்தலம் விநாயகர் சன்னதியாகவும், திருவாரூர் சோமாஸ்கந்தர் சன்னதியாகவும், திருவாவடுதுறை நந்தி தேவர் சன்னதியாகவும், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி சன்னதியாகவும், சுவாமிமலை சுப்பிரமண்யர் சன்னதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர் சன்னதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்கள் சன்னதியாகவும், சீர்காழி பைரவர் சன்னதியாகவும் வழங்கப்படுகிறது.
இந்திரன், துர்வாசர், தேவர்கள் வந்து வழிபட்ட தலம். துர்வாசரின் யாகத்திற்கு வந்த தேவர்கள் இங்கு தனித்தனியாக லிங்கம் அமைத்து வழிபட்டனர். இவர்கள் வழிபட்ட லிங்கங்கள் பிரகாத்தில் உள்ளன.
இத்தலத்தில் நவக்கிரக சன்னதி இல்லை. சனீஸ்வரர் மட்டும் இருக்கின்றார்.
கோயிலின் தீர்த்தமான ஜடா தீர்த்தம் கோயிலுக்கு உள்ளேயே உள்ளது. மிகவும் இயற்கை சூழ்ந்த நிலையில் அமைதியாக உள்ள மிகப் பெரிய கோயில்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், அப்பர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|